நல்ல நோக்கத்தில் கொலை! அதனால் விடுதலை! மதுரை

 குடிபோதையில், மகளிடம் அத்துமீறி நடக்க முயன்ற கணவரை கொலை செய்த பெண், குழந்தைகளையும் வளர்த்து, பட்டப் படிப்பையும் முடித்து, அவரது சொந்த முயற்சியில், சமூகத்தில் உயர்ந்து நிற்கிறார்.

மதுரையைச் சேர்ந்தவர் உஷாராணி, 44; இவரது கணவர் ஜோதிபாசு. இவர்களுக்கு மூன்று பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். தினமும் மது அருந்தி, குழந்தைகளை அடித்து உதைத்து வந்த ஜோதிபாசு, உச்சகட்ட போதையில், பெத்த மகளிடம் அத்துமீறி நடந்தார். கணவரின் காலில் விழுந்து கெஞ்சிய உஷாராணி, ஒரு கட்டத்தில் மகளை காப்பாற்ற, கணவரை கொலை செய்தார்.

அவனியாபுரம் போலீசார், 2011ல் கொலை வழக்கு பதிவு செய்து, உஷாராணியை கைது செய்தனர். அப்போது, மதுரை எஸ்.பி., ஆக இருந்தவர், நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரி யான, ஆஸ்ரா கார்க். வழக்கில் நேரடி கவனம் செலுத்தி, பல ஆவணங்களை சேகரித்தார்.

'தனது உயிரையும், மகளின் மானத்தையும் காப்பாற்றும் நல்ல நோக்கத்தில் தான் கொலை நடந்துள்ளது. 'எனவே, உஷாராணி மீதான கொலை வழக்கை ரத்து செய்து, இந்திய தண்டனை சட்டம், பிரிவு - 100 - தற்காப்புக்காக கொலை செய்தல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து, உஷாராணியை விடுவிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து, கொலையான வரின் தந்தை, கோர்ட்டிற்கு சென்றார்; உஷாராணியின் சூழ்நிலையை, கோர்ட்டும் கனிவோடு பரிசீலித்தது. இது போன்று, இந்திய தண்டனை சட்டம் பிரிவு - 100 ஐ, பயன்படுத்தி, கொலை வழக்கில் சிக்கிய பெண்ணை விடுவித்தது, தமிழகத்தில் இது தான் முதல் வழக்கு.

அப்பெண், அவரது சொந்த முயற்சியில் போராடி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், சமூகவியல் பட்டம் படித்து முடித்துள்ளார். மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்தார்; அவருக்கு இப்போது, 23 வயதாகிறது. இரு மகள்களில் ஒருவர் எம்.எஸ்சி., அடுத்தவர் சி.ஏ., படிக்கிறார். மகன், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து உஷாராணி கூறியதாவது: என்னை சிறையில் அடைத்துஇருந்தால், என் மூன்று மகள்கள், மகனின் எதிர்காலம், சின்னாபின்னமாகி இருக்கும். வேற்று மாநிலத்தில் இருந்து, தமிழகத்திற்கு ஐ.பி.எஸ்., பணி செய்ய வந்த எஸ்.பி., கொலை வழக்கில் இருந்து விடுவித்தார். என்னுடைய சொந்த முயற்சியில் பட்டம் பெற்று, என் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறேன்.
என் பெயரில் உள்ள, 5 சென்ட் வீட்டு மனை, விவசாய நிலத்தை யும், என் மாமனார் அபகரித்து, எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார். அதை மீட்க சட்ட ரீதியாக போராடி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில், தற்காலிக ஊழியராக டி.டி.பி., ஆபரேட்டராக பணிபுரிகிறார். முதல்வர் மனது வைத்து இவர் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறார்.